சென்னை ராயப்பேட்டையில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ராயப்பேட்டை மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகே வசிக்கும் முகமது நஸ்ருதீன் என்பவரை ஒரு தெருநாய் கடித்தது. உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அவருக்குத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாய் ஆர்வலர்களால் இன்னும் எத்தனை உயிர்களை இழப்பது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.