அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்ததா என்பதை டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசியதை திமுகவில் உள்ளவர்களே கண்டித்தனர் என்பதும், குறிப்பாக கனிமொழி எம்பி கடுமையாக கண்டனம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, அவரது கட்சி பதவி பறிக்கபட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஜெகன்னாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, பொன்முடி பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டமானது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் பொறுப்புடன் பேச வேண்டாமா என்று கூறிய நீதிபதிகள், பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்பதை டிஜிபி இன்று மாலை 4.45க்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.