சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இது கருத்து சுதந்திரத்திற்கு கீழ் வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மதத்தை அவமதிப்பதுபோல் பேசுவது, கருத்து சுதந்திரம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாப்பது ஒரு பொறுப்பு எனவும், அமைச்சர் பொன்முடிக்கு அந்த பொறுப்பு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையில் மனு, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இதன் காரணமாக, அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.