தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்த புதிய மடைமாற்று வித்தைதான் மாநில சுயாட்சி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது:
தனது ஆட்சியில் நிகழும் தவறுகளை மறைக்க, போலி இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை போன்ற பல நாடகங்களை அரங்கேற்றிய முதல்வர், தற்போது "மாநில சுயாட்சி" என்ற புதியதொரு மடைமாற்று வித்தையைக் கையிலெடுத்துள்ளார்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் சட்டப்பேரவை செயல்படும் நாட்கள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், இதுபோன்ற நாடகங்கள் மக்கள் மன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் உத்தியேயாகும்.
உண்மையில் மாநிலங்களின் உரிமையை பறித்தது திமுக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான் என்பது தேச வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
மேலும், மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று கூறும் முதல்வர், இதற்கு முன்பு அமைத்த மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல குழுக்கள் என்னவானது என்பதையும் விளக்க வேண்டும்.
எனவே, ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர் நடத்தும் இதுபோன்ற அவசியமற்ற நாடகத்தைக் கண்டித்து, அனைத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.",