கரூரில் நடைபெற்ற தி.மு.க.வின் முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, "கனிமொழி, பார்ப்பதற்குத்தான் கனிமொழி. ஆனால், நாடாளுமன்றத்தில் பேசும்போது அவர் ஒரு கர்ஜனை மொழியாக மாறிவிடுகிறார்" என்று பாராட்டினார்.
கரூரில் முப்பெரும் விழா நடத்த அனுமதி கேட்ட செந்தில் பாலாஜி, மழை பெய்தும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாக ஸ்டாலின் பாராட்டினார். "பொதுக்கூட்டம் என்று கூறி, ஒரு மாபெரும் எழுச்சிமிகு கூட்டத்தை செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு அவர் சிம்மசொப்பனமாக இருக்கிறார். அவர் செய்ய வேண்டியவற்றை சிறப்பாக செய்து முடிப்பார்" என்றும் அவர் கூறினார்.
தி.மு.க.வின் வரலாற்றில் இதுபோன்று ஒரு பிரமாண்டமான முப்பெரும் விழா இதுவரை நடைபெற்றதில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், கடந்த பாதையின் அனுபவங்களை கொண்டு, எதிர்கால பாதையை வெற்றி பாதையாக மாற்ற இந்த விழா ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.