திமுகவின் கூட்டணி கட்சிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சனம் செய்வது குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "எடப்பாடி பழனிசாமி தானாக பேசவில்லை என்றும், அவரை யாரோ பேச வைக்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது" என்றும் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் மேலும் கூறுகையில், "மக்களைச் சந்திக்கும்போது மக்களுக்கான கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி பேசுவதில்லை. அதற்கு பதிலாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சனம் செய்வது என்ற நிலையில்தான் அவரது பேட்டிகளும் பேச்சுக்களும் உள்ளன. இதை வைத்து பார்க்கும்போது, அவரை பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்பதைபுரிந்துகொள்ள முடிகிறது" என்று தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்தும் திருமாவளவன் தனது கவலையை வெளிப்படுத்தினார். "10 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.