தமிழக வெற்றி கழகம் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விஜய்க்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது: "மதவாத இந்துத்துவா சக்திகளை அகற்ற வேண்டும் என்றால் விஜய், இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும். இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தால், இந்தியா கூட்டணியில் விஜய் இணைவது நல்லது. இது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு சிறந்தது.
"இந்துத்துவா சக்திகளை எதிர்க்கும் எண்ணத்தோடு விஜய் இருப்பார் என்றால், இந்தியா கூட்டணிக்கு அவர் வரவேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.
ஆனால், திமுகவுக்கு எதிராக அரசியல் செய்கிற விஜய், திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் சேருவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
அதே நேரத்தில், காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைந்து ஒரு புதிய கூட்டணியை அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் இந்த பேட்டியிலிருந்து கருத்து தெரிவிக்கின்றனர்.