கோயம்புத்தூரில் உள்ள பூ மார்க்கெட்டில், தான் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் ஆடை குறித்து கடைக்காரர் ஒருவர் அவதூறாக பேசியதை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் துணிச்சலாக பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பூ மார்க்கெட்டிற்கு சட்ட கல்லூரி மாணவி ஒருவர் ஸ்லீவ்லெஸ் அணிந்து சென்றுள்ளார். அப்போது, கடை உரிமையாளர் ஒருவர் அவரிடம், "இப்படிப்பட்ட ஆடைகளை மார்க்கெட்டிற்கு அணிந்து வரக்கூடாது" என்று கூறி, ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த கடைக்காரரின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, அவரை நேரடியாக எதிர்த்து கேள்வி கேட்டார். "நீங்கள் ஏன் இப்படிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, இதற்கு முன் இதுபோன்ற ஆடை அணிந்த பெண்களால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாக கூறி, கடைக்காரர் தனது செயலை நியாயப்படுத்த முயன்றார்.
அதற்கு மாணவி, தான் அணிந்திருந்த ஆடை மிகவும் பொருத்தமானது என்றும், மார்க்கெட்டில் குறிப்பிட்ட ஆடைகளை அணியக்கூடாது என்றால், அதற்கான அறிவிப்பு பலகையை மார்க்கெட் சங்கம் வைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், இதுபோன்ற செயல்களுக்கு தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த வாக்குவாதத்தின் போது, சில வியாபாரிகள் கடைக்காரருக்கு ஆதரவாக பேசியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.