கொரோனா ஊரடங்கால் விவசாயம் மற்றும் விவசாய பொருட்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விளைந்த உணவு பொருட்களை அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “மக்கள் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் உறப்த்திசெய்த பொருளை அறுவடை செய்ய முடியவில்லை. ஏற்கனவே அறுவடை செய்ததை எடுத்துச்செல்ல போக்குவரத்து வசதியில்லை. விளைபொருளை வாங்க விற்பனையாளர்கள் இல்லை. ஒட்டுமொத்தமாக விவசாய தொழிலே இன்று முடங்கியிருக்கிறது.
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் மோடி மக்கள் ஆதரவு தமக்கு இருப்பதை உறுதிசெய்வதற்காக கைத்தட்ட சொன்னார். விளக்கை அணைத்து, விளக்கை ஏற்ற சொன்னார். இனியாவது மலிவான இத்தகைய அணுகுமுறைகளை தவிர்த்து மக்களை பேரழிவிலிருந்து பாதுகாக்க உரிய செயல்திட்டத்தை பிரதமர் மோடி போர்க்கால அடிப்படையில் அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.