அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தவர் கே.சி.பழனிசாமி. கடந்த ஆண்டு அதிமுக கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட முறையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதாக கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகள், பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது.
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கே.சி.பழனிசாமி திமுகவில் இணையலாம் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.