நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சில பல திட்டங்களோடு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
ஏற்கனவே, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார். நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளாராம்.
அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி சீமான், கம்யூனிஸ்ட் தலைவர்கள், முத்தரசன், பாலகிருஷ்ணன், மற்றும் சில தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். கருணாஸ் இப்படி அனைவரை சந்திக்க காரணம் என்ன என விசாரித்த போது, பின்வருமாறு பதில் கிடைத்தது.
அரசுக்கு எதிராக கருணாஸ் பேட்டி அளித்ததால், அவர் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயக்கூடும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். எனவே, தனக்காக குரல் கொடுக்க பலர் வர வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறாராம்.
தனக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும்போது, தான் கேட்பாரற்று போய்விட கூடாது என நினைக்கும் கருணாஸ், அரசியலில் தனக்கான ஆதரவு வளையத்தை அதிகரித்து வருகிறார். இதன் மூலம், அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடவும் சில துடுப்புசீட்டுகளை கணக்கில் வைத்துள்ளாராம்.