கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை வருடங்களாக ஏன் இதை மறைத்தார்? என்றும், சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சின்மயி விவகாரம் குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பிரபலங்களை அநாகரீகமாகப் பேசுவது நாகரீகமாகி வருகிறது. வைரமுத்து தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தவறு செய்திருந்தால் தண்டிக்கப்படுவதில் நமக்கு பிரச்சினையில்லை! ஆனால் அதை விட்டுவிட்டு டுவிட்டரில் எழுதுவதன் மூலம் களங்கம் ஏற்படுத்துவது இவர்களது நோக்கத்தை சந்தேகிக்க வைக்கின்றது.
இதனால் வைரமுத்துவை அசிங்கப்படுத்த முடியும் அவ்வளவுதான். இந்த விஷயத்தில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது என வழக்கறிஞர்கள் கூறிவிட்டதாக சின்மயியே கூறியுள்ளார். வைரமுத்துவுக்கு அரசியல் பின்புலம் இருந்ததால், இத்தனை வருடங்கள் கூறவில்லை. இப்போதுதான் நேரம் வந்தது என சின்மயி கூறியுள்ளார். அப்படியெனில், தற்போது சின்மயிக்கு அரசியல் பின்புலம் வந்துவிட்டதா? என்கிற சந்தேகம் எழுகிறது” என அவர் பேட்டியளித்தார்.