கமல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பிக்கும் போதே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளுக்கும் ஒரு மாற்றுக் கட்சியாக தான் மக்கள் நீதி மய்யம் பார்க்கப்பட்டது. அதனால் இப்போது தேர்தலுக்காக திமுக அல்லது அதிமுக வோடுக் கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது என கமல் நினைப்பதாகக் கூறப்படுகிறது.
அதனால் தேசியக் கட்சியான காங்கிரஸோடுக் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தது. ஆனால் காங்கிரஸ் திமுக கூட்டணியில் சேர்ந்து ம.நீ.ம. ஐ கிடப்பில் போட்டது. மற்றொரு தேசியக் கட்சியான பாஜக வோடுக் கூட்டணி வைத்தால் அதையும் நாம்தான் தூக்கி சுமக்க வேண்டும் என்ற பயத்தால் பாஜக பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இப்படிக் கூட்டணிக்காக எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுவது என்ற விஷப்பரிட்சையில் இறங்கியுள்ளது மக்கள் நீதி மய்யம். இது குறித்தக் கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்தக் கமல் ‘ நாங்கள் சுத்தமாக உள்ளோம். அதனோடு யாரோடும் கைகுலுக்கி எங்கள் கையை கரையாக்கிக் கொள்ள விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.