மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் நவம்பர் மாதம் முதலே சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றது அக்கட்சியினருக்குப் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டமாக தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வதற்காக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரோடு மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அவரது ஆலோசனைப்படி கட்சியில் பல நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தில் புதிய கட்டமைப்புகள் குறித்து விளக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் ‘ அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட நம்மிடம் பலம் உள்ளது என்பதை நாம் நிரூபித்து விட்டோம். அடுத்த இலக்கு 2021-ல் ஆட்சியைப் பிடிப்பதுதான். சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கவுள்ளார். மேலும் கட்சியின் சார்பாக புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும்’ எனவும் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைக் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதியில் தொடங்க இருப்பதாக தெரிகிறது.