மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பரிதாபமாக பலியான சம்பவத்தை வைத்து உண்மையாகவே வருத்தப்படும் அரசியல்வாதிகளை விட, இதனை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அதிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதிலும் தலித் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு இந்த சம்பவம் இன்னும் ஒரு வாரம் தாக்குப்பிடிக்கும் என கருதப்படுகிறது
இருப்பினும் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யாமல் நேர்மையாக ஒரு அரசியல்வாதி அறிக்கை ஒன்றை அக்கறையுடன் வெளியிட்டுள்ளார். அவர்தான் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பெய்த கடும் மழையில் இடிந்த கற்சுவர் அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததால் நான்கு வீடுகளில் இருந்த 17 பேர் உயிரிழந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன்
இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின் அரசும் காவல்துறையும் அதை நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது.
இருப்பினும் அவர்களின் துயரில் நானும் பங்கேற்கிறேன். வரும் மழைக்காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து பெரும் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் இருந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.