முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், அதிமுகவின் அஞ்சலி நிகழ்ச்சிகளுடன், தமிழக வெற்றி கழகத்தினரும் ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு அளிக்கும் மரியாதையின் வெளிப்பாடா? அல்லது சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன் போன்ற தலைவர்களின் காரணமாக, அந்த கட்சியினர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது.
எது எப்படி இருப்பினும், அதிமுகவின் நீண்டகால தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை கவரும் ஒரு அரசியல் நகர்வாகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு பகுதியை கைப்பற்ற, தவெக இந்த அஞ்சலி நிகழ்ச்சியை ஒரு வியூகமாக பயன்படுத்துகிறது என்ற கருத்து நிலவுகிறது.