Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.எல்.ஏவின் மகனை கைது செய்ய தமிழக காவல்துறை தயக்கம் காட்டுகிறதா? சசிகலா

எம்.எல்.ஏவின் மகனை கைது செய்ய தமிழக காவல்துறை தயக்கம் காட்டுகிறதா? சசிகலா

Sinoj

, சனி, 20 ஜனவரி 2024 (20:15 IST)
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமியை மனிதாபிமானமற்ற வகையில் அரக்கத்தனமாக அடித்து கடும் சித்ரவதை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''திமுகவினர் ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் மமதையில் இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவி 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில்   தொடர்ந்து மருத்துவ கல்வி பயில வேண்டும் என முடிவு செய்து உயர் படிப்பிற்கு ஆகும் செலவை சமாளிப்பதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதாவது சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு மாணவி வேலைக்கு சென்றதாக தெரிய வருகிறது.

குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்ற அந்த சிறுமியை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவர் மனைவி மார்லீனோ ஆன் ஆகியோர் அடித்து துன்புறுத்தியிருப்பது மன்னிக்கமுடியாதது. இது தொடர்பாக மாணவி தமிழக காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை தவறு இழைத்தவர்களை கைது செய்யாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தவறு இழைத்தவர்கள் திமுக  கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தயக்கம் காட்டுகிறதா? என்று தெரியவில்லை.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இதுபோன்று தங்கள் சொந்த கட்சியினர் யாரேனும் தவறு இழைத்து இருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார். ஆனால் இன்றோ தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு தங்கள் கட்சியினர் செய்யும் அராஜக செயல்களை ஏன் தடுக்க முடியவில்லை? ஆளும்கட்சியினரே இவ்வாறு அராஜகத்திலும், அத்துமீறலிலும் ஈடுபட்டால் தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எங்கே இருக்கும்? புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் தமிழக மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்தனர். பெண்களுக்கும் ஒரு மரியாதை இருந்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள், அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் தமிழக மக்களை பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு வகையில் தமிழக மக்களை துன்புறுத்தி கொண்டிருக்கும் திமுகவினருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் திமுகவினர் செய்யும் அராஜக செயல்களை கண்டும் காணாமல் இருப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திமுக சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். சிறுமிக்கு அநீதி இழைத்த திமுகவினர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதால் பரபரப்பு