பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையேயான வாக்குவாதம் தேர்தலை விட அதிகமாக சூடுபிடித்துள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் முரசொலி அலுவலகத்தின் சர்வே சான்றிதழை பதிவிட்டு ‘இது தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது’ என பதிலடி கொடுத்தார். மேலும் “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக நிரூபிக்க தவறினால் அரசியலில் இருந்து விலக தயாரா?” என ராமதாஸுக்கு சவால் விடுத்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது “காவல்துறையை குவித்து சீன அதிபர்-இந்திய பிரதமர் சந்திப்பை நடத்துவது தான் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு அழகா? பாதுகாப்பின்றி நடமாடுவதே சட்டம்-ஒழுங்குக்கு அழகு” என்று பேசியதை சுட்டிக்காட்டிய ராமதாஸ் ”1997ல் கலைஞர் இசட்+ பாதுகாப்பு பெற்றாரே! அப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லையா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த தொடர் மோதல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘அரசியலில் இருந்து விலக தயாரா என ஸ்டாலின் சவால் விடுத்ததை திசை திருப்புவதற்காகவே ராமதாஸ் இப்படி பேசியுள்ளார்’ என திமுக தொண்டர்கள் பக்கம் பேசிக்கொள்ளப்படுகிறது.