புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் ஒருவர் ஈடு தொகையாக பத்து ரூபாய் நாணயங்களாக கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் புதுவையில் சுயேச்சை வேட்பாளர் ராமதாஸ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். ஏற்கனவே இவர் எம்எல்ஏ எம்பி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தற்போது மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இவர் வேட்பாளர் தாக்கல் செய்ய வந்தபோது ஈடு தொகையாக பத்து ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார். அதற்கு இவர் கூறிய காரணம்தான் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கவில்லை என்றும் கடந்த மூன்று வருடங்களாக நாணயங்களை சேகரித்து வைத்திருந்த நிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் செய்ய அதை பயன்படுத்துகிறேன் என்றும் கூறினார். மேலும் அரசு அடித்த ரூபாயை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக தான் வேட்புமனு தாக்கல் செய்ய பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.