தமிழகத்தில் திமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலும் 5 மாநிலங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்த முறை வேறு சில மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் விசிகவின் தேர்தல் திட்டம் குறித்து பேசியுள்ள திருமாவளவன் “கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளது. கேரளாவில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. மேலும் ஆந்திராவிலும் போட்டியிட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேசிய அளவில் விஸ்தரிக்கும் திட்டத்தோடு இந்த முறை மக்களவை தேர்தலை அக்கட்சியினர் எதிர்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.