காலைப் பொழுதுவிடிந்து நண்பகல் வேளை வந்தால் வானில் சுடர்விடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. அதிலும் வியர்க்க விறுவிறுக்க கையில் குடைபிடித்து பாங்காக நிழலில் செல்வோர்தான் அதிகம். இந்த தாக்கத்தில் இருந்து தப்பிக்க, வருண பகவானை மகிழ்விக்கும் பொருட்டு, நாதஸ்வர இசைக்கலைஞர்கள் அண்மையில், கோயில் குளத்தில் தண்ணீரில் சாதகம் செய்வதுபோலமர்ந்து அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்தனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது :
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மற்றும்வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் உள்மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல்காற்று அதிகமாய் வீசும். வெப்பநிலை வழக்கத்தைவிட 4 லிருந்து 6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 38 மற்றும் 29 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.