பாமக கொடுத்த தொடர் இம்சை – திமுக கூட்டணியில் பாரிவேந்தர்…

சனி, 2 மார்ச் 2019 (15:35 IST)
பாஜக கூட்டணியில் இருந்த பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி திடீரென்று இன்று திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.


எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றிருந்தார். அதனால் இந்த மக்களவைத் தேர்தலிலும் பாஜக இருக்கும் அதிமுக கூட்டணியிலேயே இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்ப்பட்டது. இது குறித்து கடந்த வாரம் பேசிய பாரிவேந்தர் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதி என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடத் தயார் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இன்று திடீரென திமுக அலுவலகமான அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திமுகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் ‘கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்குழுவில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதை இப்போது ஸ்டாலினை சந்தித்து அறிவித்தேன். தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் திமுக தலைவர் அன்புச் சகோதரர் ஸ்டாலின் மூலம்தான் ஏற்படும். தற்போதைய அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர முடியாததற்குக் காரணம், தொடர்ந்து இம்சை கொடுத்து வந்த, பாமக தான். பாமக இருப்பதால் எங்களால் அந்தக் கூட்டணியில் தொடர முடியாது.’ எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எஸ். ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவ சீட்கள் பெறுவதற்குக் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ஏமாந்ததாக பலபேர் குற்றம் சாட்டினர். அப்போது எஸ்.ஆர்.எம் உரிமையாளர் பாரிவேந்தருக்கு எதிராக பாமக ஆதாரங்களைத் திரட்டி குற்றம் சுமத்தியது. அதனால் இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான வார்ததைப் போர்கள் நடைபெற்று வந்தன. அதன் காரணமாகவே இப்போது பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெறாமல் திமுக கூட்டணிக்கு பாரிவேந்தர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுகக் கூட்டணியில் ஐ.ஜெ.கே. கட்சியில் பாரிவேந்தருக்கு 1 சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் -சிறுநீரகக் கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை !