Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களவை தேர்தல் 2019: இன்னும் இறுதியாகாத திமுக கூட்டணி - வலுவாகத் தோன்றும் அதிமுக கூட்டணி

மக்களவை தேர்தல் 2019: இன்னும் இறுதியாகாத திமுக கூட்டணி - வலுவாகத் தோன்றும் அதிமுக கூட்டணி
, வெள்ளி, 1 மார்ச் 2019 (12:53 IST)
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்துவிட்ட தி.மு.க. பிற கட்சிகளுடன் கூட்டணியை இன்னும் முடிவுசெய்யவில்லை. தே.மு.தி.கவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதிசெய்து வருகின்றன. ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சியுடனும் பாரதீய ஜனதா கட்சியுடனும் கூட்டணி அமைத்துள்ளது.  பா.ம.கவுக்கு ஏழு மக்களவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் பா.ஜ.கவுக்கு ஐந்து மக்களவை இடங்களும் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளன.
 
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடனும் அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்தது. ஆனால்,  அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டதைப் போல ஏழு இடங்களைத் தங்களுக்குத் தர வேண்டுமென தே.மு.தி.க.  கோரியதால், அந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
 
தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது இடங்களும் புதுச்சேரியில் ஓரிடமுமாக பத்து இடங்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச்  சேர்ந்த ஈஸ்வரனுக்கு தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால், தி.மு.கவுடன் நீண்ட காலமாகவே இணைந்து செயல்பட்டுவரும் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் தி.மு.க. கூட்டணியில் இணைவதற்காக காத்திருக்கின்றன.
 
இதற்கிடையில், உடல் நலமின்றி இருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று சந்தித்தார். ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் தி.மு.க. குழுவினர் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த சந்திப்பு  நடைபெற்றது. விஜயகாந்தை நலம் விசாரிக்கவே தான் சென்றதாக மு.க.ஸ்டாலின் அப்போது தெரிவித்தாலும் அதற்குப் பிறகு, தி.மு.க. -  தே.மு.தி.க. இடையே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெறுவது உறுதியானது.
 
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ஒன்று, கொங்கு நாடு மக்கள் தேசிய  கட்சிக்கு ஒன்று மொத்தமாக 12 இடங்களைப் பகிர்ந்தளித்துவிட்ட நிலையில், மீதமுள்ள 28 இடங்களில் ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.எம். ஆகியவை  குறைந்தது இரணடு இடங்களையாவது எதிர்பார்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையாவது எதிர்பார்க்கிறது. ஆனால்,  தி.மு.கவைப் பொறுத்தவரை இந்தக் கட்சிகள் அனைத்திற்குமே தலா ஒரு இடத்தை மட்டுமே தர விரும்புகிறது.
 
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. குறைந்தது நான்கு மக்களவை இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் எதிர்பார்த்ததாகவும் இதனால், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பத்து இடங்களில் இரண்டு இடங்களை  திருப்பியளிக்கும்படி கேட்டதாகவும் சொல்லப்பட்டது.
 
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. அ.தி.மு.கவுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் இதனால் அதிகரித்துள்ளன. ஆகவே, தி.மு.கவைப் பொறுத்தவரை  ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் விரைவில் கூட்டணியை உறுதிப்படுத்த இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
"தே.மு.தி.க. ஆளும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தால் அதனால் வாக்குகள் பெரிய அளவில் அதிகரிக்குமென சொல்ல முடியாது. ஆனால், அ.தி.மு.க. ஒரு வலுவான கூட்டணியாக காட்சியளிக்கும். அ.தி.மு.க., தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றாக நின்றால்  கருத்துரீதியான பார்வையில் அந்தக் கூட்டணி முன்னணியில் இருப்பதாகத் தோன்றும். ஆனால், அது தேர்தல் களத்தில் வெற்றியாக மாறுமா  என்பதை இப்போது கணிப்பது கடினம்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி.
 
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் 104 இடங்களில் போட்டியிட்டு 2.41 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை. அதற்கு முன்பாக, 2014ஆம்  ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. 14 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட  வெல்லவில்லையென்றாலும் 5.1 சதவீத வாக்குகளைப் பெற்றது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன் – இந்தியா வருகை எப்போது ?