புல்வாமாத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் நேற்று (மார்ச் 1) அன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
புல்வாமாத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் மறைந்து இருப்பதாகவும் அவரை இந்தியா வசம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. ஆனாம் மசூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. அதேசமயம் மசூத் ஆசார் பாகிஸ்தானில் இருப்பதை பாக் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி ஒத்துக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ‘மசூத் அசார் பாகிஸ்தானி்ல் தான் இருக்கிறார். ஆனால் அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. அந்த அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அதேசமயம் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா தரப்பில் உறுதியான ஆதரங்களை தந்தால், அது பாகிஸ்தான் நீதிமன்றம் ஏற்கும் வகையில் இருந்தால் நாங்கள் மக்களை சமாதானம் செய்ய முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்வதேச ஊடகங்கள் சில மசூத் அசார் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவம் அவருக்கு அடிக்கடி டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அவர் ராவல் பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.