காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அதில் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை தொகுதியை கார்த்தி சிதம்பரத்திற்கு கொடுக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக பிரதமர் மோடியை புகழ்ந்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்தும் பேசிய கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்கினால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என்று ஒரு கோஷ்டி தீர்மானமே இயற்றியது.
அதேபோல் சுதர்சன நாச்சியப்பன், கே ஆர் ராமசாமி ஆகியோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி கார்த்திக் சிதம்பரத்துக்கு சீட் கிடைக்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை சிபாரிசு செய்ததாகவும் அந்த சிபாரிசின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கிடைத்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் அவரை தோற்கடித்த காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரே உள்ளடி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.