பாமக – பாஜக கூட்டணி பற்றி பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் வேடந்தாங்கல் பறவையை போல செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. முன்னதாக பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதும் இறுதியில் பாமக கூட்டணி பாஜகவுடன் முடிவானது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி “மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கூட்டணியை பொறுத்தவரை ராமதாஸ் ஒரு வேடந்தாங்கல் பறவை போல.. ஏரியில் தண்ணீர் இருந்தால் பறவைகள் வரும். வற்றினால் சென்று விடும். அப்படித்தான் அவர் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியை மாற்றிக் கொண்டிருக்கிறார். ராமதாஸ் ஒரு பேட்டியில் பாஜகவிற்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தருவேன் என சொல்லியிருந்தார். ஆனால் அவர்கள் கூடவே இப்போது கூட்டணி வைத்துள்ளார்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை நம்பி நாங்கள் இல்லை. கூட்டணி கட்சிகள் வந்தால் வரவேற்போம். வராவிட்டால் எங்களுடைய சொந்த பலத்தில் நிற்போம்” என்று பேசியுள்ளார்.