ஓசூரில் டாடா நிறுவனத்தின் ஐபோன் தொழிற்சாலை அமைய இருப்பதை அடுத்து சுமார் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாடாவின் ஐபோன் தொழிற்சாலை 1050 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் இரண்டாவதாக ஓசூரில் ஐபோன் தொழிற்சாலை அமைக்க டாடா திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த புதிய தொழிற்சாலை ஒன்று முதல் ஒன்றரை மாதங்களில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
பத்தாயிரம் ஊழியர்களை கொண்ட விஸ்ட்ரான் தொழிற்சாலையை விட இந்த தொழிற்சாலை பெரிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஓசூரில் புதிய ஐபோன் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதை அடுத்து ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஆப்பிள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக 100 சில்லறை விற்பனை நிலையங்களை நாடு முழுவதும் தொடங்க டாடா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.