எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவை அடுத்து இனி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் மருத்துவ சான்றிதழ் அளிப்பது கட்டாயமாக்க வேண்டும் என்பது குறித்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அலுவலக உதவியாளர் முதல் நீதிபதிகள் வரை பணிக்கு சேரும்போது மருத்துவ சான்று சமர்ப்பிட்த்து வரும் நிலையில் சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கக்கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் 1967ஆம் ஆண்டு முதல் திரைத்துறை சம்பந்தபட்டவர்கள்தான் ஆட்சியில் இருந்து வருகின்றனர். தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்த கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் அளித்த வரவேற்பை போன்று தற்போதைய நடிகர்களுக்கு கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் நீதிபதி கிருபாகரன் அவர்களின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.