ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டக்கூடாது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உள்ளது. இதில் மிகப்பெரிய நினைவிடம் கட்ட அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சமூக ஆர்வளர் டிராஃபிக் ராமசாமி மற்றும் திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் ஆகியோர் ஜெயலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டசபையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற கோரியும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பு வழங்கறிஞர் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைக்கு உட்பட்டே நினைவிடம் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.