தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் தற்போதைக்கு வசூல் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அதுகுறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் மறுதிறப்பு குறித்த அறிவிப்புகள் இன்னமும் வெளியாகாததால் பல தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்களை கல்வி கட்டணம் கட்ட வற்புறுத்துவதாக அரசுக்கு புகார்கள் வந்த நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் பள்ளி திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவின் மீது தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் “ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தி வரும் நிலையில் கல்வி கட்டணம் கட்டவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது?” என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விரிவான விளக்கத்தை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.