கொரோனா பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்து வருவதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 60 ஆயிரத்தை கடந்துள்ளன. இதில் சென்னையில் மட்டுமே 40 ஆயிரம் பாதிப்புகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகள் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இல்லையென்றும், அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக இருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதற்கு அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ”கொரோனா வைரஸை அதிமுக அரசா உருவாக்கியது? மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு கொரோனாவை பரப்புவது போல பேசுகிறார். அதிமுக அரசும், அமைச்சர்களும் கொரோனாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் “கடவுள் குறித்து முதல்வர் பேசியது அவரது நம்பிக்கையின் அடிப்படையில்தான். அதை மு.க.ஸ்டாலின் பெரிதுபடுத்தி அறிக்கைகளை வெளியிடுகிறார்” என்று கூறியுள்ளார்.