சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அதன் காரணமாக இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மற்றும் உள் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில், அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை மறுநாள் நவம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், நவம்பர் 9ஆம் தேதியிலும் கனமழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.