தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று மழைக்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு திசைக் காற்றின் வேகம் மாறுபடுவதால், நாளை அதாவது செப்டம்பர் 25 அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது செப்டம்பர் 27 ஆம் தேதி தெற்கு ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.