நடிகர் சூர்யா நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டபோது புதிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும், இந்த கல்விக்கொள்கையில் பொருந்தாத அம்சங்களை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு, நுழைவுத்தேர்வு ஆகியவகளுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள் இன்னும் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் சூர்யாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்
மேலும் இந்தி படிக்கக் கூடாது எனக் கூறும் திமுகவினரின் வீடுகள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்த போராட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.