Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்க‌ள் கட‌த்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது

Advertiesment
பெண்க‌ள் கட‌த்தல் - தமிழக போலீசுக்கு தண்ணி காட்டிய முன்னாள் ஆசிரியர் கைது
, செவ்வாய், 22 மார்ச் 2022 (23:25 IST)
2 இளம் பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆசிரியரை 8 மாத தேடலுக்கு பின்னர் கோவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரண்டு இளம்பெண்களையும் மீட்டுள்ளனர்.
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் என்கிற சின்னதம்பி. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியுடனான கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 2019 ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் A to Z என்ற நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானார். இதனால் ஒழுங்கீன நடவடிக்கையாக அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் குடியிருந்தபடியே தான் ஒரு நடன ஆசிரியராக இருப்பதாக அப்பகுதி மக்களை நம்பவைத்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஆசிரியர் மணிமாறன் சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் தங்கியிருந்தார். அப்போது, அங்கிருந்த ஒரு 19 வயது இளம் பெண்ணையும் அழைத்துக்கொண்டு தலைமறைவானார். சிறுமி உட்பட இருவருடன் ஆசிரியர் மணிமாறன் தலைமறைவான நிலையில், கோவை மற்றும் கன்னியாகுமரியில் காவல்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மூவர் குறித்தும் தகவல் எதுவும் கிடைக்காததால் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இதனிடையே கன்னியாகுமரி இளம் பெண் தனது வீட்டினரை தொடர்பு கொண்டு, தாங்கள் திருப்பதியில் இருப்பதாகவும், தங்களை டீ விற்க வைத்து ஆசிரியர் மணிமாறன் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அழுதுள்ளார். இந்த தகவல் அறிந்த தனிப்படை காவல்துறையினர் திருப்பதிக்கு சென்று, அங்கு தங்கியிருந்து தலைமறைவாக இருந்த ஆசிரியர் மணிமாறனை கைது செய்த தனிப்படை போலீசார் சிறுமி உட்பட இருவரையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிமாறனை கோவை அழைத்து வந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திய நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மணிமாறனை தேடி வந்த நிலையில் 8 மாதங்களுக்கு பின்பு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்