கூட்டணிக்கு வரும் கட்சியினர் தொகுதிகளை மட்டும் கேட்பதில்லை என்றும், அம்பது கோடி, நூறு கோடி பணம் வேண்டும் என்று கேட்டு பேரம் பேசுகிறார்கள் என்றும், அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, 50 கோடி குடுங்க, 100 கோடி குடுங்க" என்று கேட்கின்றனர் என்றும், "இது கூட்டணி பேச்சுவார்த்தையா அல்லது வியாபார பேச்சுவார்த்தையா?" என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
"திமுக தலைவர் ஸ்டாலின் ஏகப்பட்ட பணம் கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். அதனால் அவர் கூட்டணி கட்சி கேட்கும் பணத்தை உடனே எடுத்து கொடுத்து விடுகிறார்" என்று கூறிய திண்டுக்கல் சீனிவாசன், "அங்கே போய் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?" என்று கேட்டால், "இப்போ உங்கள் பக்கம் தான் காற்று அடிக்கிறது. அதனால் தான் உங்கள் கூட்டணிக்கு வருகிறோம்" என்று சொல்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், கூட்டணி குறித்து யாரும் பேட்டி கொடுத்து கெடுத்து விட வேண்டாம் என்றும், "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருக்கிறார் என்றும், எனவே மற்ற நிர்வாகிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.