காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோ சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியுமா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "சீனாவிடமிருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளுக்கும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே சீனாவை எதிர்ப்பதிலேயே உள்ளது. இந்த மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்," என்று தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: "காங்கிரஸ் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தவர்கள். சீனாவின் அச்சுறுத்தலை அவர்கள் காணவில்லை என்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தானின் நலன்களை, நமது நாட்டின் நலன்களுக்கு மேலாக காங்கிரஸ் கருதுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ராகுல் காந்தியின் ரிமோட் கண்ட்ரோல் சீனாவின் கைகளில்தான் உள்ளது," என்றார்.