டங்க்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன நாடகம் நடத்தினாலும், அது மக்கள் மத்தியில் எடுபடாது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை அருகே டங்க்ஸ்டன் கனிமவள சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், இதற்கு பாராட்டு தெரிவித்து முதல்வருக்கு விழா எடுக்க, மதுரையில் உள்ள போராட்டக்காரர்கள் முடிவு செய்து அதற்காக அழைப்பு விடுத்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "டங்க்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தான் போராடினார். சட்டமன்றத்தில் இரண்டு மணி நேரம் டங்க்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பேசியவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
டங்க்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அதிமுகவும் போராடியதை அடுத்து தான் முதல்வர் அதனை எதிர்க்கிறோம் என்று கூறினார். டங்க்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என பத்து மாதமாக முதலமைச்சர் அழுத்தம் கொடுக்கவில்லை. பத்து மாதங்களாக திமுக எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மக்கள் எதிர்ப்பு மற்றும் அதிமுக எதிர்ப்பை அடுத்து டங்க்ஸ்டன் திட்டத்தை எதிர்ப்பதாக முதலமைச்சர் தற்போது நாடகமாடுகிறார். இந்த நாடகமெல்லாம் மக்களிடம் எடுபடாது. செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.