தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் அவர் செய்யும் சில கிறுக்குத் தனங்கள்தான் அவர் மேல் விமர்சனங்கள் எழ காரணமாக அமைகின்றன. அதிலும் படத்தின் பரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசும் போது உணர்ச்சிவசத்தாலும் ஆர்வக் கோளாறும் தனத்தாலும், தன்னை தனியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும் அவர் பல நேரங்களில் சம்மந்தம் இல்லாமல் உளறல்களை வெளியிடுகிறார்.
சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். அதே போல இளையராஜா பற்றி பேசும்போது அவரை ஒருமையில் பேசியிருந்தார். அது ஒரு அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும் மேடை நாகரிகம் கருதி அப்படி பேசியிருக்க வேண்டாம் என்ற கருத்துகளும் எழுந்தன.
அதன் பின்னர் தன்னுடைய பேச்சுக்காக அவர் இன்னொரு நிகழ்ச்சியில் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் மிஷ்கினின் இந்த பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள விஷால் “அவருக்கு வேலையாக போச்சு. ஏதாவது தவறாகப் பேசுவார், பின்னர் மன்னிப்புக் கேட்பார். சில பேரின் சுபாவத்தை மாற்ற முடியாது. இளையராஜா போன்ற சாதனையாளரை ஒருமையில் பேச யாருக்கும் அதிகாரம் கிடையாது. இளையராஜா எல்லாம் கடவுளின் குழந்தை போன்றவர்” எனப் பேசியுள்ளார்.