கோவையில், மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை அள்ளும் வாகனத்தில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கவுள்ள செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த 15-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
ஆனால், இந்த உணவுகள் மாநகரில் குப்பை மற்றும் ஹோட்டல் கழிவுகளை அள்ள பயன்படுத்தப்படும் அதே குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த சுகாதாரமற்ற மற்றும் அலட்சியமான செயல், ஊழியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கெனவே சம்பளம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான புகார்கள் நிலவும் நிலையில், இந்த சம்பவம் ஊழியர்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.