மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியான மல்லை சத்யா, 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற பெயரில் இன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ம.தி.மு.க.வின் முதன்மை செயலாளரான துரை வைகோ மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகியான மல்லை சத்யா ஆகியோரிடையே அண்மையில் கருத்து வேறுபாடுகள் நிலவின.
கட்சித் தலைமை மற்றும் துரை வைகோ குறித்து வெளிப்படையாக விமர்சனங்கள் வைத்ததையடுத்து, மல்லை சத்யா தனித்து செயல்பட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றம் சாட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவரை முதலில் இடைநீக்கம் செய்து, பின்னர் நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கினார்.
இந்த நிலையில், சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்வில், மல்லை சத்யா 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற தனது புதிய அரசியல் கட்சியை முறைப்படி தொடங்கி வைத்தார்.
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் பலரும் இந்தப் புதிய கட்சியில் இணைந்துகொண்டனர்.
புதிதாக தொடங்கப்பட்ட 'திராவிட வெற்றிக் கழகத்தின்' தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.