தமிழகத்தில் இன்று அதாவது செப்டம்பர் 26, அன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது மட்டுமின்றி மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, செப்டம்பர் 27ஆம் தேதி தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்பகுதிகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.