சென்னையின் முக்கிய பகுதியில் மேம்பாலப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேம்பாலம் கட்டும் பணியினை கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேற்கொள்ள உள்ளதால் இப்பணியின் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டு, 06.11.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.
தற்போதுள்ள ஒருவழி போக்குவரத்தும், இதனையடுத்து, பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகளும் நடைமுறைப்படுத்தப்படும்.
ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்படும்.
மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படும், மேலும் அவர்கள் A.A. சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, குக்ஸ் சாலை சந்திப்பு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம்.
கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கி செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை - காந்தி ரவுண்டானா – பேசின் பாலம் - வியாசர்பாடி புதிய பாலம் – மார்க்கெட் - முத்து தெரு - மூர்த்திங்கர் தெரு – வலது - எருகஞ்சேரி சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.