மீன்கள் ஏற்றி சென்ற வேன் விபத்து.. சாலையில் கொட்டிய மீன்களை அள்ளி சென்ற பொதுமக்கள்..!
, வியாழன், 6 பிப்ரவரி 2025 (12:57 IST)
வேலூர் அருகே மீன்கள் ஏற்றி சென்ற வாகனம் திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததை அடுத்து, சாலையில் கொட்டிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், இரண்டு டன் கடல் மீன்களை தனது வேனில் ஏற்றி வேலூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அகரம் சேரி என்ற பகுதியில், வேன் சென்று கொண்டிருக்கும்போது திடீரென டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டது.
இதன் விளைவாக, வேனில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் கொட்டின. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பைகளிலும் பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி, சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த சம்பவத்தால், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்