சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் இன்று காலை ஒரு துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு மாடிகளைக் கொண்ட அந்த கடையின் முதல் தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, ஒருசில நிமிடங்களில் பரவியது.
விபத்து நடந்ததும் கடையில் இருந்த ஊழியர்கள் அலறியபடி வெளியேறினர். அதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது நிம்மதியான விஷயம். தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களுடன் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் முழுவதுமாக எரிந்து சேதமாகி விட்டன.
விபத்து குறித்து மேற்கு மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப கட்ட தகவலின்படி, கடையின் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துணி வணிகம் மற்றும் நகை வியாபாரம் மிகுந்த தி.நகர் பகுதியில் இவ்வாறு நிகழ்ந்த தீ விபத்து, வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.