மதுரையில் அடுத்த மாதம் சிபிஐ மாநாடு நடைபெற உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், குறிப்பாக விஜய் சேதுபதி, சமுத்திரகனி, வெற்றிமாறன், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆம் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதாகவும், ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், இந்த மாநாட்டில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் மாநில செயலாளர் சண்முகம் அறிவித்தார். மேலும், மாநாட்டிற்கான அழைப்பிதழையும் நேற்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமாரி வரை ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், திரையுலக பிரபலங்கள், இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட சில அமைச்சர்களும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.