ஈரோடு மாவட்டத்தில் மனைவியை தொடர்ந்து பாடாய் படுத்தி 13 குழந்தைகளுக்கு தந்தையான நபருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் கிட்டத்தட்ட முதல் இடத்தில் உள்ளது இந்தியா. மக்கள் தொகையை குறைக்க தம்பதிகள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம் என கூறி வரும் அரசு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் ஆகியவற்றையும் ஊக்குவித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சின்ன மாதையன். 46 வயதாகும் இவருக்கு 45 வயதில் மனைவி ஒருவரும் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் அவரது மனைவி 13வது குழந்தையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்த தம்பதியருக்கு முதலில் சில குழந்தைகள் பிறந்த பின்னரே குடும்ப கட்டுப்பாடு செய்ய மாதையனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனை செல்வதை தவிர்த்த மாதையன் இந்த குழந்தையை வீட்டு பிரசவம் பார்த்துள்ளார். மேலும் பலமுறை அவரை குடும்ப கட்டுப்பாடு செய்ய வலியுறுத்தி மருத்துவ ஊழியர்கள் சென்றால் காட்டில் சென்று மறைந்து கொள்வாராம்.
தற்போது அவரது மனைவிக்கு ரத்த சோகை உள்ளதால் இதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது ஆபத்து என மருத்துவ ஊழியர்கள் மாதையனுக்கு விழிப்புணர்வை அளித்து மருத்துவமனை அழைத்து சென்று அவரது விருப்பத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து வைத்துள்ளனர்.