கன மழை பெய்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின்கட்டணத்தை அபராதம் இல்லாமல் டிசம்பர் 10ஆம் தேதி வரை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால், மேற்படி ஆறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் டிசம்பர் 10ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.