மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டம் வேண்டாம் என தமிழக அரசு கூறியதாக மத்திய ரயில்வே அமைச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது, "அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டியின்போது சத்தம் அதிகமாக இருந்ததால், அவர் கூறியதை செய்தியாளர்கள் சரியாக கவனிக்கவில்லை. தனுஷ்கோடி ரயில்வே திட்டம் குறித்து கேட்டதாக நினைத்து, அது தொடர்பாக பதில் தரப்பட்டது. அன்றைய தினம் ரயில்வே அமைச்சரின் பதில் தனுஷ்கோடி திட்டம் பற்றியது; மதுரை-தூத்துக்குடி திட்டம் பற்றியது அல்ல," என விளக்கம் அளித்துள்ளனர்.
நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனையால் தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கடிதம் அனுப்பி இருந்தது. மேலும், மதுரை-தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்து விட்டதாக குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்றும் தெற்கு ரயில்வே அளித்திருக்கும் விளக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை-தூத்துக்குடி மக்களின் நீண்டகால கோரிக்கையான மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய அகல ரயில் பாதை திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.