நாளை காணும் பொங்கலை அடுத்து கடற்கரை, பூங்காக்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பழவேற்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சோதனை சாவடி அமைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் வருபவர்கள் கவனமாக குழந்தைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நகை, பணம் மற்றும் பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல்துறையினரிடம் தகவல் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனத்துறையினர் ரோந்து செல்வார்கள் என்பதால் வழி மாறி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.